சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

முதல் ஆயிரம்   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்  
திருமாலை  

Songs from 872.0 to 916.0   ( )
Pages:    Previous   1  2    3  Next
பாயும் நீர் அரங்கந் தன்னுள்
      பாம்பு-அணைப் பள்ளிகொண்ட
மாயனார் திரு நன் மார்வும்
      மரகத-உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும்
      துவர்-இதழ்ப் பவள-வாயும்
ஆய சீர் முடியும் தேசும்
      அடியரோர்க்கு அகலல் ஆமே?



[891.0]
பணிவினால் மனமது ஒன்றிப்
      பவள-வாய் அரங்கனார்க்குத்
துணிவினால் வாழ மாட்டாத்
      தொல்லை நெஞ்சே நீ சொல்லாய்
அணியின் ஆர் செம்பொன் ஆய
      அருவரை அனைய கோயில்
மணி அனார் கிடந்தவாற்றை
      மனத்தினால் நினைக்கல் ஆமே?



[892.0]
பேசிற்றே பேசல் அல்லால்
      பெருமை ஒன்று உணரல் ஆகாது
ஆசற்றார் தங்கட்கு அல்லால்
      அறியல் ஆவானும் அல்லன்
மாசற்றார் மனத்துளானை
      வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தான் ஆவது உண்டோ?
      பேதை நெஞ்சே நீ சொல்லாய்



[893.0]
கங்கையிற் புனிதம் ஆய
      காவிரி நடுவுபாட்டுப்
பொங்குநீர் பரந்து பாயும்
      பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன்
      கிடந்தது ஓர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்?
      ஏழையேன் ஏழையேனே



[894.0]
வெள்ள-நீர் பரந்து பாயும்
      விரி பொழில் அரங்கந் தன்னுள்
கள்வனார் கிடந்தவாறும்
      கமல நன் முகமும் கண்டும்
உள்ளமே வலியை போலும்
      ஒருவன் என்று உணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்து உன்
      கள்ளத்தே கழிக்கின்றாயே



[895.0]
Back to Top
குளித்து மூன்று அனலை ஓம்பும்
      குறிகொள் அந்தணமை தன்னை
ஒளித்திட்டேன் என்கண் இல்லை
      நின்கணும் பத்தன் அல்லேன்
களிப்பது என் கொண்டு? நம்பீ
      கடல்வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள்செய் கண்டாய்
      அரங்க மா நகருளானே



[896.0]
போதெல்லாம் போது கொண்டு உன்
      பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டு உன்
      திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு
      கலந்திலேன் அது தன்னாலே
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே
      என் செய்வான் தோன்றினேனே?



[897.0]
குரங்குகள் மலையை நூக்கக்
      குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடைக்கல் உற்ற
      சலம் இலா அணிலும் போலேன்
மரங்கள் போல் வலிய நெஞ்ச
      வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்க்கு ஆட் செய்யாதே
      அளியத்தேன் அயர்க்கின்றேனே



[898.0]
உம்பரால் அறியல் ஆகா
      ஒளியுளார் ஆனைக்கு ஆகிச்
செம் புலால் உண்டு வாழும்
      முதலைமேல் சீறி வந்தார்
நம் பரம் ஆயது உண்டே?
      நாய்களோம் சிறுமை ஓரா
எம்பிராற்கு ஆட் செய்யாதே
      என் செய்வான் தோன்றினேனே



[899.0]
ஊர் இலேன் காணி இல்லை
      உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம்
      பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என்
      கண்ணனே கதறுகின்றேன்
ஆர் உளர் களைகண்? அம்மா
      அரங்க மா நகருளானே



[900.0]
Back to Top
மனத்தில் ஓர் தூய்மை இல்லை
      வாயில் ஓர் இன்சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித்
      தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலையானே
      பொன்னி சூழ் திருவரங்கா
எனக்கு இனிக் கதி என் சொல்லாய்?
      என்னை ஆளுடைய கோவே



[901.0]
தவத்துளார் தம்மில் அல்லேன்
      தனம் படைத்தாரில் அல்லேன்
உவர்த்த நீர் போல என்தன்
      உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்
துவர்த்த செவ்வாயினார்க்கே
      துவக்கு அறத் துரிசன் ஆனேன்
அவத்தமே பிறவி தந்தாய்
      அரங்க மா நகருளானே



[902.0]
ஆர்த்து வண்டு அலம்பும் சோலை
      அணி திரு அரங்கந் தன்னுள்
கார்த் திரள் அனைய மேனிக்
      கண்ணனே உன்னைக் காணு
மார்க்கம் ஒன்று அறியமாட்டா
      மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன்
      மூர்க்கனேன் மூர்க்கனேனே



[903.0]
மெய் எல்லாம் போக விட்டு
      விரிகுழலாரிற் பட்டுப்
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட
      போழ்க்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்கனே உன்
      அருள் என்னும் ஆசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன்
      பொய்யனேன் பொய்யனேனே



[904.0]
உள்ளத்தே உறையும் மாலை
      உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லாக்
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்
      தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம்
      உடன் இருந்து அறிதி என்று
வெள்கிப்போய் என்னுள்ளே நான்
      விலவு அறச் சிரித்திட்டேனே             



[905.0]
Back to Top
தாவி அன்று உலகம் எல்லாம்
      தலைவிளாக்கொண்ட எந்தாய்
சேவியேன் உன்னை அல்லால்
      சிக்கெனச் செங்கண் மாலே
ஆவியே அமுதே என்தன்
      ஆருயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால்
      பாவியேன் பாவியேனே



[906.0]
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும்
      மைந்தனே மதுர ஆறே
உழைக் கன்றே போல நோக்கம்
      உடையவர் வலையுள் பட்டு
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது
      ஒழிவதே உன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி
      அரங்கமா நகருளானே



[907.0]
தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ்
      திருவரங்கத்துள் ஓங்கும்
ஒளியுளார் தாமே யன்றே
      தந்தையும் தாயும் ஆவார்?
எளியது ஓர் அருளும் அன்றே
      என் திறத்து? எம்பிரானார்
அளியன் நம் பையல் என்னார்
      அம்மவோ கொடியவாறே            



[908.0]
மேம் பொருள் போக விட்டு
      மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம் பரிசு அறிந்துகொண்டு
      ஐம்புலன் அகத்து அடக்கிக்
காம்பு அறத் தலை சிரைத்து உன்
      கடைத்தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும்
      சூழ் புனல் அரங்கத்தானே



[909.0]
அடிமையிற் குடிமை இல்லா
      அயல் சதுப்பேதிமாரிற்
குடிமையிற் கடைமை பட்ட
      குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய்
      மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும்
      அரங்க மா நகருளானே



[910.0]
Back to Top


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Sun, 24 Mar 2024 01:35:54 -0400
 
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

divya prabandham song